சென்னையிலுள்ள எனது அலுவலகத்திற்கு ஒரு தம்பதியினர் ஜீவநாடியில் பலனறிய வந்தனர். அவர்களை அமரவைத்து, "என்ன காரியமாகப் பலனறிய வந்தீர்கள்'' என்றேன்.
ஐயா, "எங்கள் மகளுக்கு 28 வயதாகின்றது. கடந்த மூன்று வருடங்களாக திருமணம் செய்ய முயற்சித்து வருகின்றோம். ஆனால் சரியான வரன் அமையவில்லை. தடையாகிக்கொண்டே வருகின்றது. மகளின் ஜாதகத்தைப் பார்த்த ஜோதிடர்கள் ராகு- கேது தோஷம் உள்ளதால் திருமணம் தடையாகின்றது எனக் கூறி தோஷம் விலக பரிகாரங்களைக் கூறினார்கள். அவர்கள் கூறிய அனைத்தையும் முறையாகச் செய்தோம். ஆனாலும் பலனில்லை.
ஜோதிடர்களில் சிலர் இவளுக்கு ராகு- கேது தோஷம் இருப்பதால் இதேபோன்று தோஷமுள்ள ஆணுக்குத்தான் திருமணம் செய்து வைக்கவேண்டும் என்று கூறுகின்றார்கள். ராகு- கேது தோஷமில்லாத ஆணுக்கு திருமணம் செய்துவைத்தால் குடும்ப வாழ்க்கையில் பிரச்சினை, பிரிவு உண்டாகும் என்று கூறினார்கள். ராகு- கேது தோஷமுள்ள பையனாகப் பார்த்து தேடினோம்.
ஆனாலும் வரன் அமையவில்லை. என் மகளின் திருமணத் தடைக்கு உண்மையான காரணம்தான் என்ன? மகளுக்கு திருமணம் எப்போது? எப்படி நடைபெறும் என்பதை அறிந்துகொள்ளவே அகத்தியரை நாடி வந்துள்ளோம்'' என்றார்.
ஜீவநாடி ஓலையைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன். ஓலையில் அகத்தியர் எழுத்துவடிவில் தோன்றி பலன்கூறத் தொடங்கினார்.
இவன் ஜாதகம் பார்த்த ஜோதிடர்கள் கூறுவதுபோன்று ராகு- கேது, கிரகங்கள் தரும் தோஷம் காரணமில்லை. பாம்பு, பல்லி தோஷம் என இவன் பயந்து, பணம் செலவு செய்துகொண்டு இருக்கின்றான். இவன் செய்த பாவம்தான் இவன் மகளுக்குத் திருமணத்தடையைத் தருகின்றது. இவன் செய்த பாவத்தையும் அதனால் உண்டான சாபத்தையும் கூறுகின்றேன்.
இவனது 13 வயதில் இவன் தந்தை இறந்து போனான். இவன் தாயும், இவள் மூத்த சகோதரியும் குடும்ப சொத்தாக இருந்த கொஞ்ச நிலத்தில் விவசாயம் செய்தும், மேலும் கூலிவேலை செய்து, அதில்வரும் வருமானத்தில் வாழ்ந்துகொண்டு இவனையும் படிக்க வைத்தார்கள்.
இவன் படித்து முடித்து ஒரு அரசு உத்தியோகத்தில் அமர்ந்தான். சுயமாக சம்பாதிக்கத் தொடங்கியவுடன், தன் அக்காவுக்கு திருமணம் செய்துவைக்காமல் அவளைப் பற்றிக் கவலைப்படாமல் இவன் ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டான். இவன் மனைவி இவளைவிட மகாபாவி. திருமணம் முடிந்த சில நாட்களில் தன் தாயையும், சகோதரியையும் பிரிந்து தன் மனைவியுடன் வேறு ஊரில் சென்று வசிக்கத் தொடங்கினான்.
சில மாதங்கள் சென்றபின்பு இவர்களுக்கு இருந்த பூர்விக நிலத்தையும் வேறு ஒருவருக்கு விற்றுவிட்டான். இதனால் தாய், சகோதரிக்கு எந்த ஆதாரமும் இல்லாமல் போய்விட்டது. பெற்ற தாயையும், உடன்பிறந்த சகோதரியையும் அனாதைகளாக்கி பசியும் பட்டினியுமாய் இவனும் மனைவியும் அலைய விட்டுவிட்டார்கள்.
இவனால் கைவிடப்பட்ட இவன் தாயும், சகோதரியும் கூலி வேலை செய்து வாழ்ந்தார்கள். இவன் தாய், தன் மகளைப் பார்க்கும் போதெல்லாம் திருமணமாகி கணவனுடன் வாழவேண்டிய வயதில் மகளுக்கு வாழ்க்கை அமையாமல் போய்விட்டதே என்று கண்ணீர் வடிப்பாள். மகளின் நிலையை எண்ணி மகனின்மீது வெறுப்பும், கோபமும்கொண்டு பெற்ற மகனென்றும் நினைக்காமல் மகனுக்கு பலவிதமான சாபங்களை வாரிவிட்டாள். பெற்ற தாய்விட்ட சாபமும், பூர்வீக சொத்தை விற்று, சகோதரிக்குரிய பங்கைத் தராமல் சகோதரி விட்டதால் உண்டான சாபமும், இவன் வம்ச வாரிசான மகள்மீது இடிபோல் அம்பாய் இறங்கியது.
சில வருடங்களில் இவன் தாய் இறந்துவிட்டாள். சகோதரி தனி மரமானாள். இவனும் தன் அக்காவின் நிலையைப் பற்றிக் கவலைப்படவில்லை. அவள் இன்றும் தானேஉழைத்து பொருள் தேடி வாழ்ந்துவருகின் றாள். தாயும், மகளும் விட்ட சாபம் தான் இவன் மகள் வாழ்வில் கொளுந்துவிட்டு எரிந்து, திருமணத்தைத் தடுத்து, குடும்ப வாழ்க்கை அமையவிடாமல் தடுத்து வருகின்றது. இப்போது இவனும் மனைவியும் மகளின் நிலையை எண்ணி கண்ணீர்விட்டு கலங்கி வாழ்கின்றார்கள். நான் கூறுவதெல்லாம் இவன் குடும்பத்தில் நடந்ததா? இல்லையா? என்று கேள்.
அகத்தியர் கூறியது அனைத்தும் உண்மைதான். இப்போது தான் திருமணத்தடைக்கு உண்மையான காரணத்தை அறிந்துகொண்டேன். நான் செய்த பாவம் என் வம்ச வாரிசான என் மகள் வாழ்வைப் பாதிக்கின்றது என்பதைப் புரிந்துகொண்டேன். என் அக்காவுக்கு திருமணம் தடையாகி, கன்னியாகவே வாழ்வது போன்று என் மகளும் கன்னியாகவே வாழவேண்டிய நிலை ஏற்பட்டுவிடுமா? நான் செய்த பாவத்திற்கு என்ன பரிகாரம் செய்யவேண்டும் என்று அகத்தியர் கூறுகின்றாரோ அதனைத் தவறாமல் செய்துவிடுகின்றேன் என்றார்.
அகத்தியன் யான் ஜோதிடன் அல்ல, இவனுக்கு பரிகாரம் சொல்ல, இவன் செய்த பாவத்தால் யார் பாதிக்கப்பட்டார்களோ, சாபம் விட்டார்களோ, அவர்களால்தான் சாப நிவர்த்தி தரமுடியும். ஜோதிடர்கள் கூறும் எந்த பரிகாரங்களும், வழிபாடுகளும் சாப நிவர்த்தி தராது.
இவன் தன் சகோதரியை அழைத்துவந்து, ஆயுள்வரை அவளுக்கு எந்தக் குறையும் இல்லாமல் காப்பாற்றவேண்டும். இவன் சம்பாதிக்கும் பணத்தை அக்காவிடம் தந்து இவர்களுக்கு தேவையானதை அவளிடம் வாங்கிக் கொள்ளவேண்டும். இவனால் கடந்தகாலத்தில் அனுபவித்த வேதனையும், கோபமும் மறந்து மனம் நிறைவடையும் போதுதான் தாயின் சாபமும், சகோதரி சாபமும் நிவர்த்தியாகும். மகளின் திருமணத்தடை விலகும் என கூறி விட்டு ஓலையில் இருந்து அகத்தியர் மறைந்தார்.
அகத்தியர் கூறியபடியே அனைத்தையும் செய்கின்றோம். என் அக்காவை அழைத்துவந்து ஆயுள்வரை அவளைக் காப்பாற்றுவேன் என்று கூறி, என்னிடம் விடைபெற்றுச் சென்றார்கள்.